இன்று காலை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
காற்றின் திசை மாறுபாடு காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் இந்த மழை மேலும் தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், தற்போது அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கொளத்தூர், நந்தம்பாக்கம், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, என பல்வேறு இடங்களில் மழை பெய்தது
நேற்று இரவு சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் வாணியம்பாடி பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறுதலாக இரண்டு சிறுமிகள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல் இன்று வெளியான தகவலின் படி தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.