தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே புதன்கிழமை மதியம் கரையைக் கடக்கடக்கவுள்ளது. இதன் காரணமாக நாளை வரையில் தமிழகம், ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியாகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.