மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும்.! முதலமைச்சர் திட்டவட்டம்.!
சென்னை: தமிழக சட்டப்பேரவை யில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். தனித்தீர்மான உரையில் அவர் கூறுகையில், மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என மேம்போக்காக கூறப்பட்டாலும், சட்டப்படி, அதனையும் மத்திய அரசு தா மேற்கொள்ள வேண்டும்.
சாதிவாரி முழு விவரங்கள் தொடர்பான தரவுகளை விரிவாக மாநில அரசால் மேற்கொள்ள இயலாது. பொதுவெளியில் சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தள்ளிப்போட்டது.
கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்து முடிந்து ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளாமல் இருக்கிறது. அந்தந்த மாநில அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் , அதனை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் நிலை உள்ளது என விளக்கம் அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் தனித்தீர்மானம் வாசிக்கையில், இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டே நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்த வேண்டும். இந்த தனித்தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதன் பின்னர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.