PFI அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிச போக்கின் உச்சம்! – சீமான்

Default Image

PFI மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது என சீமான் கண்டனம்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிசப் போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட ஜனநாயக அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வீரியமிக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்டுள்ள இக்கொடும் அடக்குமுறை நடவடிக்கையானது பாசிசப்போக்கின் உச்சமாகும்.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் இசுலாமிய மக்கள் மத ஒதுக்கலுக்கும், கொடுந்தாக்குதல்களுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிற வேளையில், இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பான நலவாழ்வுக்காகவும் பாடுபடுகிற வலிமை வாய்ந்த இயக்கமான PFI மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக் குமுறலையும், ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாடி, வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி, ஆட்சியதிகாரத்தை அடைந்து, இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமில்லாத நாட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற மக்கள் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்படுவது இந்நாட்டின் சனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இத்தடை நடவடிக்கை என்பது பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்வதோடு, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் சட்டத்தின் உதவியோடு தடையைத் தகர்த்து மீண்டுவர துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்