2 ஆண்டுகளுக்கு பிஎஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும்..!
மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் “ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜ்னா” திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் கொரோனா காலத்தில் வேலை இழப்பை ஈடு செய்யவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவது.
இந்த திட்டத்தின் மூலம் 1.10.20 முதல் 30.06.21 வரை புதிதாக வேலையில் சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி சந்தா முழுவதையும் நிபந்தனைகளுக்குட்பட்டு மத்திய அரசு செலுத்தும் என கூறியுள்ளது. இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் கூறுகையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆயிரம் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சந்தா 12% மற்றும் தொழிலதிபர் சந்தா 12% மட்டும் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும்.
ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை புதிதாக பணியமர்த்தப்பட்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான 12 சதவீதம் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும். பிஎஃப் அமல்படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தில் 1.10. 2020 க்கு முன் வரை உறுப்பினர் ஆகாமல் யுஏஎன் நம்பர் பெறாமல் ரூ.15,000 குறைவான ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை யுஏஎன் நம்பர் வாங்கி ரூ.15,000 குறைவான ஊதியம் வாங்கி வேலையை விட்டு விலகி 30.9.2020 வரை வேறு எங்கும் பணியில் சேராமல் இருந்தால் இந்த திட்டத்தில் பயன் பெறுவர் என தகவல் தெரிவித்துள்ளார்.