திட்டமிட்டு டார்கெட்.. எதிர்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு – ஆர்.எஸ்.பாரதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார் என ஆர்எஸ் பாரதி பேட்டி.
தமிழகம், கேரளா, தெலுங்கனா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மற்றும் மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதில், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாகவும், மேலும், கரூரில் அமைச்சரின் நண்பர், சகோதரர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டுகிறது மத்திய அரசு.
கர்நாடக தேர்தலில் தோல்வியை மறைக்க பார்க்கிறது பாஜக. அனுமன் பெயரை சொல்லி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயன்ற பிரதமரின் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது. கர்நாடக தேர்தல் முடிவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக தேர்தலில் பாஜகவினர் 2,000 நோட்டுகளை தான் விநியோகித்து உள்ளது குறித்து ஆதாரம் கிடைத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் மேன் ஆஃப் தி மேட்சியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இருப்பார்.
முதலமைச்சரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களை திசை திருப்பவே வருமான வரித்துறை சோதனை. பாஜகவை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என அண்ணாமலை அண்மையில் பகிரங்கமாக பேசி இருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே இது காட்டுகிறது.
முதலமைச்சரின் முயற்சிகள் மக்கள் மத்திய நல்ல விதமாக சென்றும் வரும் நிலையில், பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. காவல்துறைக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை சோதனை பற்றி கவலையில்லை. எத்தனை ரெய்டுகள் வேண்டுமானாலும் நடத்தி கொள்ளட்டும். அதைப்பற்றி கவலையில்லை. திட்டமிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றன என தெரிவித்தார்.