பாபர் மசூதி வழக்கு: மத்திய அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – திருமாவளவன்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாடுடன் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் என்பதற்கு ஊடங்களிலே ஏராளமான மறக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அவர், அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பகத்தன்மையாக இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் கூறியது வியப்பளிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்தார்,
அதுமட்டுமின்றி, நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்கு பேராபத்தாக மாறிவிடும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.#BabriDemolitionCase #BabriMasjid pic.twitter.com/PLytNgRkME— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 30, 2020