நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம்! விவசாயிகள் பீதியடைய வேண்டாம் – வேளாண்துறை அமைச்சர்
புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக வேளாண்துறை அமைச்சர் தகவல்.
வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் அனுமதி இல்லை என்பதால் பயப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். இதுபோன்று, புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கூறியுள்ளார். நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.