தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு மறைமுக தடை.? அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்.! 

PMK Leader Anbumani Ramadoss

தேசிய மருத்துவ ஆணையம், புதிதாக மருத்துவ கல்லூரி துவங்குவது பற்றி புதிய விதிமுறைகளை வகுத்துள்ள்ளது. அதில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று வகுத்துள்ளது. இந்த விதிகளின் கீழ் பார்த்தால் தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகள் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் தற்போது மேற்கண்ட விதிகளின் கீழ் அதிக அளவிலேயே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

இந்த விவகாரம் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வாயிலாக மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு கண்டனமும், மாநில அரசுக்கு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில்,  தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசிதழில் ஆகஸ்ட் 16-ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறையானது 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021-ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகை கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத சூழல் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஏற்பட்ட இதே நிலை தான், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் ஏற்படும்

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால் தான் இந்த புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இது அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் எடுக்கப்பட்ட குறைநோக்கு பார்வை கொண்ட நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும் கூட, அந்த இடங்கள் அனைத்திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

 உலகில் மக்கள்தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா தான். 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி.

இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. இதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்