மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம் – டிடிவி தினகரன்
கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற ஒரு தனி யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.
எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.
எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். 1/4 @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 11, 2021