#Breaking:”சிமென்ட் விலை மேலும் ரூ.25 குறைப்பு” – சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம்..!
சிமென்ட் விலை மேலும் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிமென்ட்,ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனையடுத்து,கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு,கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,பேச்சுவாரத்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து,விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூட்டம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அப்போது,கொரோனா இரண்டாவது அலையால் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.இதனால்,விலை ஏற்றமானது தவிர்க்க முடியாததாக உள்ளது என்று தெரிவித்தது. இதனால்,சிமென்ட் விலையை குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து,சிமென்ட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அதன்படி,தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.490 லிருந்து,ரூ.460 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும்,அதுமட்டுமல்லாமல்,கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்க உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழ்நாட்டில் சிமென்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டு உள்ளதாக சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில்:”தொடர்ந்து அதிகரித்து வந்த கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதனால் ,ரூ.490-க்கு விற்கப்பட்டு வந்த சிமென்ட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையீட்டை அடுத்து ரூ.460 ஆக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து,கட்டுமான பொருட்கள் விலை மேலும் குறைக்கப்படும் என்று சிமென்ட் உற்பத்தியாளர்கள் உறுதி அளித்திருந்தனர்.அதன்படி, சிமென்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ.25 குறைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 நாட்களின் தமிழ்நாட்டில் சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.55 குறைந்துள்ளதால் கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்”,என்று தெரிவித்தார்.