அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த பிரபல யூடியூபர் “சாப்பாட்டு ராமன்” கைது!
முறையான அங்கீகாரம் இல்லாமல் கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்த சாப்பாட்டு ராமன் எனும் பிரபல யூடியூப் சேனல் நடத்தி வரக்கூடிய பொற்செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூபில் 10 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைர்களையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்ட உணவு பிரியர் தான் பொற்செழியன். இவரை சாப்பாட்டு ராமன் என்றால் தான் பலருக்கும் தெரியும், ஏனென்றால் சாப்பாட்டு ராமன் என்ற பெயரில் தான் இவர் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பெயருக்கு ஏற்றார் போல இவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொண்டு பலரையும் ஆச்சர்யப்பட வைப்பவர்.
சின்னசேலம் பகுதியில் உள்ள கூகையூர் எனும் இடத்தில் வசித்து வரும் இவர் மாற்று வழி மருத்துவம் படித்த மருத்துவர் எனும் பெயரில் சில இயற்கையான மருந்துகளை வழங்கி வருகிறார்.அண்மையில்கூட அவர் அதிகளவில் உண்ணக்கூடிய உணவுகள் செரிப்பதற்கான எடுத்துக்கொள்ளக் கூடிய இயற்கையான மருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். இதனையடுத்து தற்பொழுது இவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்வதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது கிளினிக்கிற்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு கொரோனா உள்ளிட்ட பல நோய்களுக்கான ஆங்கில மருந்துகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அவர் கிளினிக்கை சீல் வைத்ததுடன் அங்கிருந்து அவரையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். மேலும், அவரிடமிருந்த ஆங்கில மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்பு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பொற்செழியன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல யூடியூபர் சாப்பாட்டு ராமன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.