பிரபல பின்னணி பாடகர் மறைவு:முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை:மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகத்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகரும்,நடிகருமான மாணிக்க விநாயகம்,தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.குறிப்பாக, தவசி,பருத்திவீரன்,வெயில்,சந்திரமுகி உள்ளிட்ட படங்களின் பாடல்களை பாடியுள்ளார்.மேலும்,திருடா திருடி, வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில்,சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாயகம் காலமானார். இதனையடுத்து,மாணிக்க விநாயகம் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்தார்.இதுகுறித்து,நேற்று தனது ட்விட்டரில் முதல்வர் கூறியதாவது:
“பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு.வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.
பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்”, என பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில்,இன்று மாலை 4 மணியளவில் கோட்டூர் புறத்தில் உள்ள இடுகாட்டில் மாணிக்கம் விநாயகத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,மறைந்த மாணிக்கம் விநாயகம் அவர்களின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.அதன்படி, திருவான்மியூரில் உள்ள மாணிக்க விநாயகத்தின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அப்போது, முதல்வருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் உடனிருந்தார்.