“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் 'தேசிய மொழி' என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

mk stalin pm modi

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன்  இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி மாத கொண்டாட்டம்? எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

அதைப்போல, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழலில், இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது ” இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. 

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.

இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் எனவும்” கடிதத்தில்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்