படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!
பட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் CBSE பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ளனர்.
![CBSE Exam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/CBSE-Exam.webp)
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE – Central Board of Secondary Education) அங்கீகாரம் பெறாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இப்படியான சூழலில் நடுவிக்காடு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி வரையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் 19 பேரும் தங்கள் பெற்றோர்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து தனியார் பள்ளி குறித்து புகார் அளித்தனர் . இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் வரும் அக்டோபர் மாதம் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (N.I.O.S. – National Institute of Open Schooling) மூலம் நடத்தப்படும் தேர்வெழுத முடிவு செய்யப்பட்டது.
இப்படியான சூழலில் தற்போது திடீர் திருப்பமாக சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களை மாநில பாடத்திட்டத்தின் (State Board) கீழ் நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து தற்போது பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் 19 மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுத பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.