துப்பாக்கி சூடு…!காவல்துறை மீது வழக்குப்பதியாத சிபிஐ இணை இயக்குநர்…! நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை …!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வற்புறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மே 22-ந் தேதி நடைபெற்ற பொதுமக்களின் மாபெரும் பேரணியின் போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமின்றி அதிரடியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுன் உட்பட7 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றமதுரை கிளை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யாததை அடுத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.