தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு – சிபிஐ விசாரிக்க ஒப்புதல்
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர்.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்தது.அப்பொழுது தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் தமிழக அரசும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிப்பும் வெளியிட்டது.இதற்கு இடையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது . உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.