ஊழியர் மரணம்;திமுக எம்பி உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு…!
முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் தி.மு.க. எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களுக்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமாக ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது.அத்தொழிற்சாலையில்,மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில்,கடந்த மாதம் 19 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை.அதன்பின்னர்,அவர் உயிரிழந்து விட்டதாகவும்,அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் எம்பி ரமேஷ் அவர்களின் உதவியாளர் கோவிந்தராஜின் மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து,சந்தேகமடைந்த கோவிந்தராஜின் மகன் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கோவிந்தராஜின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரியும்,இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காடாம்புலியூர் போலீசார் நிலையத்தை முற்றுகையிற்று உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார்.இதனால்,போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதற்கிடையில் கோவிந்தராஜூவின் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
மேலும்,சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன்காரணமாக,கோவிந்தராஜூவின் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.
இந்நிலையில்,கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக,எம்பி.டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களை தவிர்த்து மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷ் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.