தமிழக காவேரியா? கர்நாடக காவேரியா? என்னதான் பிரச்சனை? பாகம்-1!!

Default Image

‘நடந்தாய் வாழி காவேரி’ என சிலப்பதிகாரத்தில் எழுதி வைத்தார்கள், ஆனால் காவிரி தவழ்ந்து கூட தமிழகத்திற்கு வருவதில்லை. என்னதான் அப்படி இருமாநிலத்துதிற்கும் பிரச்சனை? இந்த பிரச்சனை கடந்த சில ஆண்டுகளில் உருவானதல்ல.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மதராஸ் சமஸ்தானத்திற்கும். மைசூர் சமஸ்தானத்திற்கும் உருவான சிறிய தீப்பொறியே, தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 1807 ஆம் ஆண்டு மதராஸிரற்க்கும், மைசூருக்கும் காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது . அப்போதே பேச்சுவார்த்தைகளும் துவங்குகிறது. பேச்சுவார்த்தை 50 ஆண்டுகளை தாண்டி நடக்க அவ்வப்போது மழை பெய்யும் நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. பின்னர் 1866 ஆம் ஆண்டு மைசூருக்கான இங்கிலாந்தின் பிரதிநிதி கர்நாடகத்தில் ஒரு புதிய அணையைக் கட்ட விரும்புகிறார்.

இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கிறது மெட்ராஸ் மாகாண அரசு. அப்படி அணை கட்டினால் நமக்கு வரும் நீர் குறையும் என்று சரியாக கணிக்கிறது மெட்ராஸ் அரசு. பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக அந்த பேச்சுவார்த்தை நடக்க, 1892 ஆம் ஆண்டு மெட்ராஸ் மற்றும் மைசூர் மாகாண அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது.

அந்த ஒப்பந்தம் கூறுவது என்னவென்றால்…

  1. மைசூர் அரசு புதிதாக எந்த ஒரு ஆணையும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட கூடாது…
  2. அவ்வாறு அமைக்கத் திட்டமிட்டால் அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியை பெற்றாக வேண்டும்…
  3. மேலும் பாசனப் பரப்பை மைசூர் அரசு விரிவு படுத்த கூடாது…

இப்படி பல கண்டிஷனுடன் ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு இரு மாகாண அரசுகளும் சம்மதம் தெரிவித்து அப்போது ஒரு முடிவு ஏட்டப்படுகிறது. பின்னர் 1910 ஆம் ஆண்டு மைசூர் அரசு, ஒப்பந்தத்தை மீறி கர்நாடகாவின் கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41 டிஎம்சி கொள்ளளவில் ஒரு அணையைக் கட்ட திட்டம் தீட்டுகிறது . அதே காலகட்டத்தில் மதராஸ் மாகாண அரசும் சேலம் மாவட்டத்தில் தற்போது உள்ள மேட்டூர் அணையை கட்ட முடிவெடுக்கிறது.

பின்னர் ஒப்பந்தத்தை மீறியதாக மதராஸ் அரசு, இங்கிலாந்திடம் மைசூர் அரசு மீது புகார் செய்ய, அந்த புகார் 1924ம் ஆண்டு வரை நீடிக்கிறது. பின்னர் 1924-ஆம் ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் மீண்டும் ஓர் ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இரு அரசுகளுமே அணையை கட்டிக்கொள்ள இங்கிலாந்து அரசு அனுமதி வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்திலும் 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அனைத்து சாராம்சங்களும் வந்து சேருகிறது. குறிப்பாக 1924ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஆயுள் 50 ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்திடப்படுகிறது.

இதன் பின்னர் சில ஆண்டுகள் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்க, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. சுதந்திரம் கிடைத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், கர்நாடகம் தமிழ்நாடு என தனித்தனியாக மாகாணங்கள் பெறுகிறது .

உண்மையை சொல்ல வேண்டுமானால் காவேரி ஆறு ஒரு வற்றாத ஜீவநதி அல்ல. மழை பெய்தால் தான் இரு மாநிலங்களுக்குமே தண்ணீர். இதனை கருத்தில்கொண்டு கர்நாடக அரசு 1960களில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேலும் இரண்டு அணைகளைக் கட்டும் பணிகளை துவங்குகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு ஒப்பந்தத்தின்படி புதிய அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. இந்த வழக்கை பொருட்படுத்தாத கர்நாடக அரசு இரண்டு அணைகளையும் கட்ட துவங்கியது. மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்த கர்நாடகம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட அந்த (1924) ஒப்பந்தமும் ஒருதலைபட்சமானது. இது தற்போதைய காலத்திற்கு செல்லுபடியாகாது, எனவும் வாதம் வைக்கிறது. இப்படியே இந்த வழக்கு சென்று கொண்டிருக்க 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிறது.

காலாவதி ஆவதற்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் தமிழகமும் கர்நாடகமும்  16 ஆண்டுகள் போராடுகின்றன. ஒருபக்கம் கர்நாடக அரசு காவிரி, ஆறு எங்களிடம் தான் உற்பத்தியாகிறது ஆகவே அதன் உரிமை எங்களுக்கு அதிகம் எனக் கூற.. இன்னொரு பக்கம் தமிழ்நாடு காவேரி ஆறு தமிழ்நாட்டில் தான் அதிக தூரம் பயணிக்கிறது, அதனால் அதன் மீது அதிக உரிமை இருக்கிறது என்று வாதிடுகிறது .

பின்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் வழக்குகள் சென்று கொண்டிருக்க 1976ஆம் ஆண்டு உண்மை கண்டறியும் குழுவின் மூலம் இரு மாநிலங்களுக்கும் ஒத்துப் போகும் வகையில் ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இங்குதான் சிக்கல், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் இதற்கு முன்னரே தமிழக அரசு கலைக்கப்பட்டுவிடுகிறது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அதன் பின்னர் பொறுப்பேற்ற எதிர்க்கட்சித் தலைவர் எம்ஜிஆர் உண்மை கண்டறியும் குழுவின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் 1892-1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர் கேட்கிறார். பின்னர் இது அரசியல் ஆக மாற்றப்படுகிறது.

காவிரியில் தண்ணீர் கிடைத்தால் தான் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஓட்டு, காவிரியில் இருக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்பாமல் இருந்தால் தான் கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஓட்டு என்ற நிலை உருவாகிறது. இதனால் இரு அரசுகளும், இரு மாநில மக்களும் கடுமையாக மோதிக் கொள்கின்றனர்.

இப்படி காவிரி தண்ணீர், அரசியல் ஆனதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற தஞ்சாவூர் விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு தாங்களாகவே சென்று ஒரு வழக்கை தொடுக்கின்றனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரவுகளையும் எடுத்துக்கொண்டு 1990ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பினை அறிவிக்கிறது. அதாவது இரு மாநில அரசுகளும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. இந்த இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஆகவே ஒரு தீர்ப்பை தீர்ப்பாயத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிடுகிறது. அதே ஆண்டு ஆண்டு தீர்ப்பாயமும் உருவாக்கப்படுகிறது.

பூதாகரமான காவேரி பிரச்சனை பின்னர் இந்த தீர்ப்பாயம் ஒரு புதிய முடிவு எடுக்கிறது. 1980 முதல் 1990 வரை தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்குகிறது. அதாவது அதன்படி 205 டிஎம்சி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பாயம் கூறுகிறது. இந்த தீர்ப்பினால் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடிக்க, அங்கு வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்திற்கு அடித்து விரட்டப்படுகிறார்கள். மேலும், 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகின்றனர். இந்த கலவரம் பெரிதாக வெடித்து அங்கு ஒரு மாதம் வரை பள்ளி கல்லூரிகள் மூடப்படுகிறது. பின்னர் தான் காவிரி பிரச்சனை பெரும் அரசியல் பொருளாகவே மாறுகிறது.

தற்போது வரை அரசியல் மற்றும் வழக்கு என்று சென்று கொண்டிருக்கும் காவிரியின் உரிமை யாருக்கு என்பது தற்போது வரை ஒரு குழப்பமான சிக்கல் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. சர்வதேச நதிநீர் பங்கீட்டில் படி பார்த்தால் ஒரு ஆறு அதிகம் பயணிக்கும் அந்த நிலப்பரப்பிற்கு சொந்தம் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாகவே உலகின் மிக நீளமான நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான், என்ற மூன்று நாடுகள் அமர்ந்து பேசி ஒரு முடிவினை எட்டியுள்ளது.

அடுத்த பாகம் தொடரும்…..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori