காவேரி நதிநீர் : கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு.!
காவேரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி, காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவை விட குறைவான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரின் அளவை தரவேண்டும் என தமிழக அரசு தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்திலும், நேற்று நடைபெற்ற காவேரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டத்திலும், மேற்கண்ட கோரிக்கையையே தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வைத்து வந்தனர்.கடந்த 4 மாதங்களில் மட்டும் 45 டிஎம்சி அளவில் தண்ணீரை தமிழக அரசு தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து சற்று அதிகரித்த நிலையில், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது . கிருஷ்ணராஜசாகர் அணையில்இருந்து தமிழகத்திற்கு நேற்று வரை 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 4,398 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதே போல, கபினி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது . இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட படும் தண்ணீரின் அளவானது 6,398 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.