காவிரி மேலாண்மை கூட்டம் – தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை காவிரியில் உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அதன்படி, தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை 53 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 15 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட்டன என குற்றசாட்டியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அரசின் கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.