Cauvery: உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு, ஆணையம் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம். தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் ன்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றம் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆணைய உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா உள்ளது. சட்ட ரீதியாக சென்று கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை சரியாக இருக்காது. காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடியை காப்பாற்ற உதவும். ஒட்டுமொத்த நீரை திறக்க கோரவில்லை, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை தான் திறந்துவிட கோருகிறோம் எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.