காவிரி மேலாண்மைவிவகாரம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியது தீர்மானம்!
தமிழக சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்ககோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை விடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.
இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்ககோரும் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்தார்.
தீர்மானம் குறித்து ஸ்டாலின் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக வேண்டியிருக்கும் என்றதோடு, இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவும் தயார் என்று கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், “காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளது. நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த காலங்களை போலவே மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. சென்னை வந்த பிரதமரிடம், அனைத்து கட்சி தீர்மானத்தை விளக்கி கோரிக்கை வைத்தோம்” என்றார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளை பேரவையில் பட்டியலிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. அப்போது காவிரி விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு குறித்து விமர்சனத்தையும் முன் வைத்தார்.
இதனையடுத்து, தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, காவிரி விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் விமர்சனம் செயததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். துரைமுருகன் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி மூன்றும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்றார். பின்னர், தீர்மானம் அனைத்து கட்சிகளுடன் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேறியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.