காவிரி மேலாண்மை விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை!
மு.க.ஸ்டாலின் , காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தொலைபேசி மூலம் தங்களிடம் பேசியபோதும், நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்துள்ள பிரதமர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று கூறியதாக, தாங்கள் தம்மிடம் தெரிவித்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பும் மூடப்பட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் என்றாகி, இன்றைக்கு நீர்வளத்துறைச் செயலாளரை மட்டுமே சந்திக்க முடியும் என்ற நிலையில், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உணர்வை மத்திய அரசு அவமதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்ற மத்திய நீர்வளத் துறைச் செயலாளரின் பிழையான வாதத்தை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எதிர்த்தாரா, விளக்கம் அளித்தாரா என்பது தெளிவாகவில்லை என்றும், முதலமைச்சரான தாங்களும் இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பே, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சரை, மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.