ரூ.500 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
அமெரிக்காவை சேர்ந்த கேட்டர்பில்லர் எனும் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி வருகின்றன.
ஏற்கனவே, ஜபில் (Jabil) எலெக்ட்ரானிக் நிறுவனம் திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு செய்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிகாகோவில் வைத்து கையெழுத்தாகின.
அதே போல, சான் பிராசிஸ்கோவில் நோக்கியா, பேபால் போன்ற முன்னணி நிறுவங்களுடன் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், திருச்சி, மதுரை, என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க கையெழுத்தாகின.
இன்று வெளியான தகவலின்படி, அமெரிக்காவை சேர்ந்த கேட்டர்பில்லர் எனும் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதன்மூலம் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்கள் விரிவுபடுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுவரை சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.