சாதி கொடுமை : கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்..! விசாரணைக்கு உத்தரவு…!
கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்.
கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கோபிநாத் என்பவர் வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார்.
அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி என்பவர், இப்படி நடந்து கொள்ளாதீர்கள், மரியாதையுடன் நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமியை அவரது சாதி பெயரை கூறி மிரட்டியுள்ளார். உங்களுடைய பணியை எப்படியாவது காலி செய்து விடுவேன், உங்களால் ஊரில் இருக்க முடியாது என கூறி காலில் விழுமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த முத்துசாமி கோபிநாத் காலில் விழுந்துள்ளார். அப்போது கோபிநாத் மன்னித்து விட்டதாகவும், தனது மீதும் தவறு இருப்பதாகவும் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பல தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கோவை ஆட்சியர் சமீரன் தெரிவித்திருந்த நிலையில், ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.