பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்க தொகை? – தமிழ்நாடு அரசு!
பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்க தொகை வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என கூட்டுறவு சங்களின் பதிவாளர் சுற்றறிக்கை.
2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜன.3-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பழுப்புநிற காகித உறைகளில் பொட்டலமிட்டு வைத்திருக்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் தொகுத்து ஒரே தவணையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என்று ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான தினசரி அறிக்கை பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ஆகியவை ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜன.3-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில், அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன், பொங்கல் பரிசுத் தொகையை வழங்க முடியுமா? என முதலமைச்சர், அரசு உயர் அதிகாரிகளிடம் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், அதுவும் ரூ.1000 வழங்க முடியுமா என்று ஆலோசனை நடத்தியாகவும் கூறப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.