90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2012ம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள், செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டியிருந்தன.
அதன்படி, ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும் ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டியிருந்தன.
மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ்7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’ தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டியிருந்தது.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டியிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து – முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு#tngovt #cmmkstalin #dmk pic.twitter.com/WBlr97VKoN
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 29, 2021