ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அவர்கள் மறித்தபோது, நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் இவர்களை விரட்டிச் சென்று பெல் கணேசபுரம் ரவுண்டானா அருகே எட்டி உதைத்தார்.அப்போது, தடுமாறி கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜா காயமடைந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வழியாகச் சென்றவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு, போலீஸாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் திருச்சி- தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைய மறுத்ததால் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அப்போது பொதுமக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், சிலர் வழிநெடுகிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
அப்போது, போராட்டம் நடைபெற்ற பெல் கணேசாபுரம் ரவுண்டானா பகுதியில் 14 அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக 10 பேர் மீது பெல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் திருவெறும்பூர், கடைவீதி, துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகளை சேதப்படுத்தியதாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதன் ஓட்டுநர் செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 6 பிரிவுகளின் கீழ் துவாக்குடி தெற்குமலை சமாதானபுரத்தைச் சேர்ந்த சரவணன், அண்ணா வளைவு பெரியார் திடலைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் மீது திருவெறும்பூர் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.இதன்மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4-லிருந்து 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல்துறையின் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் போராட்ட காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறோம். போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் 45 அரசுப் பேருந்துகள், 7 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக புகார் வந்துள்ளது.
இதுதொடர்பாக பெயர் குறிப்பிட்ட 38 பேர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்துள்ளோம். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளில் (எப்.ஐ.ஆர்) மேலும் சிலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வீடியோ காட்சிகளின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை எப்.ஐ.ஆரில் சேர்த்து, அவர்களையும் கைது செய்ய வாய்ப்பு உள்ளது” என்றனர்.