பேரறிவாளனை விடுவிக்கும் வழக்கு ! ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் – சிபிஐ
பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,பேரறிவாளனை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சி.பி.ஐ.க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.