கள்ளக்குறிச்சி:இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை என்றும்,இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக இருந்த திருக்கோவிலூரை அடுத்த தி.மண்டபம் பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த காசி என்பவரை சரியாக பத்தாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 22-ஆம் தேதி திருக்கோவிலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு இருளர் குடியிருப்புக்குள் நுழைந்த காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளை சூறையாடினார்கள்.
பின்னர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை விசாரணைக்காக, ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் இரு வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் பெண்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அங்குள்ள காட்டுக்குள் ஓட்டிச் சென்ற காவலர்கள், அங்கு 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் ஒருவர் மகப்பேற்றை நோக்கியிருந்தவர்; மற்றொருவர் 17 வயது சிறுமி. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி பல்வேறு சூழல்களில் மிரட்டி, இதுகுறித்து புகார் கொடுக்காமல் தடுக்க முயன்றனர். அதையும் மீறி அந்தப் பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்து இழுபறிக்கு பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததை நியாயப்படுத்த முடியாது. வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு காவல்துறை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக குற்றவழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப்பத்திரிகையில் உள்ள குறைகளை களைந்து அனுப்பும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் அனுப்பியது. ஆனால், காவல்துறை இன்று வரை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதன்பின் இந்த வழக்கு விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும். திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இப்போது தாக்கல் செய்யப்பட்டால் கூட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்பதே நீதியை மறுக்கும் செயல் தான். ஆனால், அதற்கும் கூட வாய்ப்பளிக்காமல் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை முடக்கி வைத்திருப்பது இந்த வழக்கின் விசாரணையை சீர்குலைக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் கூட, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும் பணியில் சேர்ந்து விட்டனர். அவர்கள் இப்போதும் பணியில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை காவல்துறை தாமதப்படுத்துவதாக தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதி மறுக்கப் படுவது நியாயமல்ல.
திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் தற்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த கொடிய நிகழ்வு நடந்த போது வடக்கு மண்டல காவல்துறை தலைவராக இருந்தவர் அவர் தான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்ததும் அவர் தான். அதன்பிறகு தான் இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வழக்கு குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த அவருக்கு, இந்த வழக்கை இயல்பான முடிவுக்கு கொண்டு வரும் கடமை உள்ளது.
இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் இந்த வழக்கை விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.