செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய கோரிய வழக்கு – நீதிமன்றம் உத்தரவு
வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி அவரது மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்த நிலையில் ,மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவருக்கு பிரேமா என்ற மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த 30-ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் நெய்வேலி போலீசார் செல்வமுருனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்பு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கடந்த 4-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து வருகின்றனா்.இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரது மனைவி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,செல்வமுருகனின் மனைவி பிரேமாவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.மேலும் இது குறித்து முடிவெடுக்க விருத்தாச்சலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.