மீனவர்களை விடுவிக்க உத்தரவிட கோரி வழக்கு!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைதாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக மீனவர்கள் கைது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து மனித உரிமை மீறலை இலக்கை கடற்படை அரங்கேற்றியுள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகனின் மனுவை விரைவில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரிக்க உள்ளது.