ஊரடங்கை மீறி போராட்டம் ! சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு
புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.
மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.இதனிடையே நேற்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில் போராட்டம் நடத்திய சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் ஊரடங்கை மீறி ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக மதுரவாயல் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.