சென்னையில் இருந்து பெங்களூர் அழைத்துச் சென்று விசாரணை!
சென்னை போலீசார் கொள்ளையன் நாதுராம் விற்ற நகைகளை மீட்பதற்காக, அவனையும், அவனது கூட்டாளிகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு, பெங்களூர் விரைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் மேல்தளத்தில் துளையிட்டு நகை, பணத்தை நாதுராம் உள்ளிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் கொள்ளையடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த வாரம் நாதுராம், அவனது கூட்டாளிகள் தினேஷ் சௌத்ரி, பக்தாராம் ஆகியோரை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளையடித்த நகைகளை சென்னை சவுகார்பேட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள அடகுக்கடைகளில் விற்றது தெரியவந்தது.
இதன்பேரில் சவுகார்பேட்டையில் திருட்டு நகைகளை வாங்கிய அடகுக்கடைக்காரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பெங்களூரில் நாதுராம் கும்பல், ஒரு கிலோ தங்க நகைகளை விற்றதாக கூறப்படும் அடகு கடைக்கு சென்று திருட்டு நகைகளை மீட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாதுராம் உள்ளிட்ட மூவரையும், போலீசார் இன்று அதிகாலை பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். அடகுக்கடை உரிமையாளரிடமிருந்து நகைகளை மீட்பதோடு, நாதுராம் கும்பல் தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.