பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு.!
கைதிகளின் பல்பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கில், பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் வரவேற்றுள்ளது.
நெல்லை அம்பாசமுத்திர காவல்நிலையத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அம்பாசமுத்திர ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், இந்த புகார்களை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்தரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 326-ன் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். வழக்கை முறையாக எடுத்து விசாரித்து, குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.