தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது வழக்கு பதிவு!
சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர், விருத்தாசலத்தில் போராட்டம் நடத்திய 50 பேர், சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் போராட்டம் நடத்திவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து இன்று சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.