ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் கிளை
ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் போராட்டம் நடைபெற்றதாக ஸ்டெர்லைட் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியிருந்த நேரத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுகட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே 31ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்றது. இதன்பின் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அந்த அனுமதி மேலும் நீடிக்கக் கோரி தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.