#Breaking : ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -சட்டப்பேரவை செயலாளர் பதில் அளிக்க உத்தரவு
- பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை இன்று ( பிப்ரவரி 4-ஆம் தேதி) விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், வழக்கினை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக மனுதாரரகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று (பிப்ரவரி 4-ஆம் தேதி) நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதன் படி இன்று விசாரணை நடைபெற்றது.அப்பொழுது ஒபிஎஸ் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாரர்கள் கேட்கிறார்கள். ஆனால் நீதிமன்றங்கள் அவ்வாறு செய்ய இயலாது என்று வாதிட்டார். சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது. எனவே இவர்கள் தொடர்ந்துள்ள இந்த மனுக்கள் அடிப்படை முகாந்திரமற்றதாக உள்ளது என்று வாதிட்டார்.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிடுகையில், ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு அதற்கான உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்று வாதிட்டார்.இறுதியாக ,தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு மீது சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன் ? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது .இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என்று தெரிவித்தது.திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைள் என்ன என்பதை பதில் தர சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கினை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.