கோவையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்!
தொடர் மழைக் காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக்தில் பல்வேறு மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் கடந்த 21 மணிநேரத்தில் 9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் மழைக் காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே, கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று பெய்த கனமழை காரணமாக காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 கார்கள் அடித்து வரப்பட்டன. நல்வாய்ப்பாக அதில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். காரமடையில் மழை வெள்ளத்தால் அங்கிருந்த காரை அடித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் காரமடையில் மழை வெள்ளம் காரை அடித்து செல்லும் காட்சி.. #rain #cbe #கோவை #KovaiRains #rainupdate #CoimbatoreRains pic.twitter.com/ZVuhHpJkT5
— அனிஷ் (@AniahEditor) October 22, 2024
மழைப்பொழிவு நிலவரம்
கோவை விமான நிலையம் பகுதியில் 8.7 செ.மீ, கோவை தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 7.7 செ.மீ, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 5.8 செ.மீ, வால்பாறையில் 7.4 செ.மீ ஆகவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் 4.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.