ஆபத்தான பொருட்களை எடுத்து சென்றால் ரயில்வே சட்டப்பிரிவு 154, 164, 165ன் படி குற்றம் – ரயில்வே
மதுரையில் இன்று காலை சுற்றுலா ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் ஆன்மிக பயணம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இந்த சமயத்தில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் மற்றொரு ரயிலில் இணைப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீவைத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலிண்டர் வைத்து சமையல் செய்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தடவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு வருகின்றனர்.
மதுரை ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம். சட்டவிரோத சிலிண்டரில் பயணிகள் சமைக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல், மதுரையில் தீ விபத்து நடந்த சுற்றுலா ரயிலில் சிலிண்டர், விறகு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்லமாட்டோம் என அளித்த உறுதிமொழியை சுற்றுலா பயணிகள் மீறியுள்ளனர். சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. 3 சமையல் சிலிண்டர்கள் வைத்திருந்ததால் மளமளவென தீ பரவியுள்ளது.
தடை இருக்கும் பட்சத்தில் தடையை மீறி சிலிண்டரை எடுத்து சென்றுள்ளனர். எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை ரயிலில் எடுத்து செல்வது ரயில்வே சட்டப்பிரிவு 154, 164, 165ன் படி குற்றம் என்றும் விதிமீறல் நடந்துள்ளது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, எளிதில் தீப்பற்றக்கூடிய, வெடிக்க கூடிய பொருட்கள் இல்லாமல் ரயிலில் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.