ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.. காரணத்தை உடனே கூற அவசியமில்லை.. அமலாக்கத்துறை வாதம்!

Minister Senthil balaji

நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை அமலாக்கத்துறை வாதம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை வாதம்:

ஆட்கொணர்வு மனுவில் உள்ள வரம்புகள் குறித்து விளக்கி அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார். அப்போது அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. கைது நடவடிக்கை சட்டவிரோதமானதல்ல என்று நீதிமன்றம் முடிவுக்கு பிறகு அது சட்டபூர்வமாகவே கருதப்படும். கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரும் வரை கைது சட்டபூர்வமானதாகவே கருதப்படும்.

நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒருவரை கைது செய்து விட்டால், ஆட்கொணர்வு மனு மூலம் நிவாரணம் பெற முடியாது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நீதிமன்றக் காவலில் வைக்க ஆஜர்படுத்தும்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரலாம். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் உள்ளாரே தவிர அமலாக்கத்துறை காவலில் இல்லை. கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதனால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என நிரூபணம் ஆகிறது. நீதிமன்ற காவலில் வைக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் நிரூபணம் ஆகிறது. எனவே, நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. அதுமட்டுமில்லாமல், உடனடியாக கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை.

கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்கு முன்பாகவே அதற்கான காரணத்தை அமைச்சரிடம் நீதிபதி தெரிவித்துவிட்டார். மருத்துவமனைக்கு ஜூன் 14-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மாவட்ட நீதிபதி நேரில் சென்றபோது கைதுக்கான காரணத்தை அமைச்சரிடம் தெரிவித்தார் எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. எனவே, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என அமலாக்கத்துறை தரப்பு வாதம் வைத்தது.

செந்தில் பாலாஜி தரப்பு:

இதனிடையே, குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 41 ஏ-வை அமலாக்கத்துறை கடைபிடிப்பது அவசியமா? என்றும் கைது செய்யும் முன்பு சம்மன் அனுப்ப வேண்டியது அவசியமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன், குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 41 ஏ-வை அமலாக்கத்துறை கடைபிடிப்பது அவசியம். தற்போதைய வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டியது அவசியம் என்பதை அமலாக்கத்துறை நிரூபிக்கவில்லை. கஸ்டம்ஸ், ஜிஎஸ்டி, உள்ளிட்ட சட்டங்களில் கஸ்டடி எடுத்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

அதுபோல அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு விரோதமானது. கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்-க்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கதுறை கூறுகிறது.

கைது மொமோவோ, கைது குறித்த தகவலோ கைது செய்தபோது தயாரிக்கப்படவில்லை. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கும்போது, இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்