திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!
திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவரை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ” ஸ்டாலின் அவர்களுக்கு கருப்பு நிறத்தை பார்த்தாலே ஸ்டாலின் அவர்களுக்கு பயம் வருகிறது என்று நினைக்கிறேன். அவருடைய கட்சி கொடியிலே கருப்பு நிறம் இருக்கிறது. அதனை அவர் நீக்கமாட்டாரா? மாணவிகள் துப்பட்டாவை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
கருப்பை பார்த்தாலே பயப்படும் ஸ்டாலின் முதலில் அவருடைய கட்சியில் உள்ள கருப்பை நீக்கம் செய்யவேண்டும். அதன்பிறகு மாணவிகள் துப்பட்டாவை நீக்கலாம். இப்படி நடந்தது உண்மையில் ஒரு மோசமான முன் உதாரணம்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் ” திமுக மட்டும் ஆர்ப்பாட்டம் பண்ணலாம்..போராட்டம் பண்ணலாம் எதிர்க்கட்சியை எதிர்த்து பேசலாம் ஆனால் மற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தால் அது தவறு என்று சொல்லி கைது செய்கிறார்கள்.
உடனடியாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்து அரசியல் செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்போம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சமயலா செய்கிறீர்கள்? எல்லாரும் அரசியலுக்காக தான் கட்சி வைத்திருக்கிறார்கள். நீங்கள் செஞ்சா ஞாயம்? எதிர்க்கட்சி செய்தால் தவறா?” எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேள்விகளை எழுப்பினார்.