பள்ளிகள் திறக்கலாமா…வேண்டாமா? இன்று கருத்து கேட்பு..!
தமிழகம் முழுதும் பள்ளிகளை திறக்கலாமா…வேண்டாமா.? என்று இன்று கருத்து கேட்பு நடைபெறுகிறது.
தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம். ஆனால், பெற்றோர் என்ற பெயரில், அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது. அதே நேரத்தில், ஜாதி மற்றும் மத அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதலை அரசு வெளிட்டுள்ளது.
இதற்கிடையில், அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். அது மட்டுமின்றி பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்தும் கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று நேற்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார் என்பது ககுறிப்பிடத்தக்கது.