ஒழுங்குபடுத்தலாமே தவிர அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி, விசிகாவின் சமூக ஒற்றுமை மனித சங்கிலி உள்ளிட்ட எந்த அமைப்புகளும் அக்டோபர் 2-ஆம் தேதி அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல்துறை முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்று வரும் நிலையில், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதற்கு தமிழக காவல்துறை தரப்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டடுள்ளது. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர்களை, ஒதுக்குவதற்கு ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை ஊர்வலத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமே தவிர அனுமதி மறுக்க, காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா?, தங்களால் சட்டம் – ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், இந்தியா முழுவதும் நடைபெறும் பாரம்பரிய ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன? என்றும் தமிழகத்தில் மாற்று கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல உரிமை மறுக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.