இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறிச் செல்கிறதோ என எண்ணம் ஏற்படுகிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்க தேவர் பிறந்த தமிழ் நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது. 2019 ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின், வரக்கூடிய காலகட்டத்திலேயே திமுக ஆட்சிக்கு வரப் போகிறது அப்படி வருகிற நேரத்தில் தேர்தலில் நாங்கள் என்ற உறுதிமொழியை வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்.
ஒருவேளை அந்த சொல்லாததில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற சொல் ஆளுநர் உரையில் இடம் பெறாததால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்ற வாசகமும் அடங்கி உள்ளது போலும். திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கான காரணத்தை தமிழக முதல்வர் கடந்த ஜூன் 23 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
அதிலே இந்திய அரசமைப்பு சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதாக சுட்டிக் காட்டி அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாத நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதே அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அது பொருளல்ல சட்டமேதை அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டம் பகுதி 5 இன் படி யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல. எனவே யூனியன் ஆஃப் ஸ்டேட் என்பதற்கு பொருள் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான். தமிழக முதல்வர் தனது பேச்சில் அண்ணா 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், மா.பொசியும், ராஜாஜியும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருக்கிறது என்றும் அதற்காக ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை இன்னும் சொல்லப்போனால் மாநிலங்கள் திருப்பித் தரப்பட்டுள்ளது என்று தான் அண்ணாவே 1963 மக்களவையில் பேசியிருக்கிறார்.
அதாவது மாநிலங்களை பிரித்து கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். எனவே மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் யூனியன் என்ற வார்த்தையின் பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதற்கு பொருள் என்பதையும் இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதையும் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே சமயத்தில் இந்திய அரசைப் பற்றி குறிப்பிடும்போது கவர்மெண்ட் ஆப் இந்தியா என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது எனவே இந்திய நாட்டை ஆளும் ஒரு அரசைக் குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான ஒன்றாகும். ஆனால் இப்போதைய திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் இந்திய பேரரசு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை முதலில் முதல்வருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை, வாழ்வாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப் படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும் இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…