குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை – குறிஞ்சி என். சிவக்குமார்..!
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குறிஞ்சி என். சிவகுமார் அவர்களைத் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆணையிட்டார்.
இந்நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் முதல்வர் அவர்கள் எப்படி தமிழக அரசை வெளிப்படை தன்மையுடன் நடத்துகிறாரோ,அதேப்போன்று அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். மேலும்,மக்களுக்கு எளிய முறையில் மிகக் குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி திரு என்.சிவகுமார் அவர்கள் கட்டுமானப் பொறியாளர் ஆவார். இவர் ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தின் அரிமா சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.