முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு, தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஆயுத்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
இந்தியா முழுவதும் தீபாவளி போல கொண்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா..!
இதனிடையே, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரின் வெளிநாடு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என்றும் வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிடவும், தொழிலதிபர்களுடனும் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு, தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது மற்றும் ஆளுநர் உரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.