நாளை இடைத்தேர்தல் முடிவு… நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில், நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்ற 27-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கில் 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இடைத்தேர்தலில் 74.74% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
வேட்பாளர்கள் நிலவரம்:
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், அனைவரும் எதிர்பார்க்கும் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு:
வாக்கு எண்ணிக்கைகள் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும், 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் தேர்தல் அதிகாரி கூறியிருந்தார்.
இபிஎஸ் திடீர் ஆலோசனை:
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சேலத்தில் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.