காவலர் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரி – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதில்!
காவலர் தாக்கியதால் உயிரிழந்த சேலம் வியாபாரி குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் பேரவையில் முதல்வர் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய முதல்வர், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.